ads

மணிக்கூர் - கைகளை பராமரிப்பது எப்படி?


கைகளை பராமரிப்பது எப்படி?
இந்த வாரம் கைகளை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. இதற்கென்று தனியாக இப்போது சலோன்கள் வந்துவிட்டாலும் அதற்கென்று செலவழிக்க மனமோ, பொறுமையோ பலருக்கு இருப்பதும் இல்லை. திடீரென்று ஒரு நாள் பார்க்கும்போதுதான் அய்யோ ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று தோன்றும். பிறகு அந்த லோஷன், இந்த ஸ்க்ரப் என்று மாற்றி மாற்றி ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் உபயோகித்து விட்டு மறுபடியும் பழைய கதையையே தொடருவார்கள். இந்த விஷயத்தில் சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் இந்த நேரமின்மை பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் கைகளுக்கு வருவோம். திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இன்னும் பொருந்தும்.
கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள். எப்போதுமே கிளவுஸ் பிடிக்காது என்பவர்கள் பாமோலிவ் டிஷ் க்ளீனிங் லிக்விட்டில் 'Tough on Grease , Soft on Hands" என்று குறிப்பிட்டிருக்கும் வெரைட்டி வாங்கி உபயோகப்படுத்தலாம். மற்ற பிராண்டுகளில் இந்த தன்மையுள்ள லிக்விட் கிடைத்தாலும் வாங்கி உபயோகப்படுத்தலாம். இதுதவிர கைகளில் தண்ணீர் படாத வண்ணம் தடுக்கும், ஹெவி ட்யூட்டி செய்பவர்களுக்கென்ற உள்ள சிலிக்கான் டைப் லோஷன்களை போட்டுக் கொண்டும் பாத்திரம் கழுவலாம். Avon Brand ல் இந்த வகை ஹேண்ட் க்ரீம் உள்ளது.
எப்போதும் கிச்சன் அருகே ஒரு சின்ன சைஸ் ஹேண்ட் லோஷன்(Vaseline Brand நன்றாக இருக்கும்) இருப்பது அவசியம். பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். இதை தினசரி ரொட்டீனாக வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள்.
நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம். மோதிரம் அணிபவராக இருந்தால் இரவு அதனை அகற்றிய (திருமண மோதிரம் அணிபவராக இருந்தால் அது தவிர மற்ற மோதிரங்களையாவது கழட்டிவிடுங்கள்) பிறகே தூங்க செல்லுங்கள். இல்லாவிட்டால் மோதிரம் போட்ட இடம் ஒரு நிறமாகவும், அங்கே ஸ்கின் இறுகி கடினமாகவும் ஆகிவிடும். கைக்கு தேவையான அத்தனை காஸ்மெட்டிக் ரேஞ்சும் Avon, Palmer, Vaseline போன்ற பிராண்டுகளில் கிடைக்கிறது.
கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். மெஹந்தி போடுபவராக இருந்தால் உடைகளுக்கு பொருத்தமான மெஹந்தி டைப்பை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக வெஸ்டர்ன் உடைகளுக்கு பிளாக்/ அரேபிக் மெஹந்தி டிசைன்கள் நன்றாக பொருந்தும். கைகளில் மெஹந்தி எப்போதுமே சரியாக பிடிப்பதில்லை என்று சொல்லுபவர்கள் மெஹந்தியை போட்டு காய்ந்த பிறகு ரிமூவ் செய்ய தண்ணீருக்கு பதில் எண்ணெய் உபயோகித்து, பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4,5 கிராம்பு போட்டு அதில் வரும் புகையை கை முழுக்க படுமாறு வையுங்கள். மருதாணி நன்கு பிடித்துக் கொள்ளும். மருதாணி கைகளில் காயும்போதே, ஒரு சின்ன கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றில் சக்கரையை கலந்து திக்காக வைத்துக் கொண்டு அதனை பஞ்சில் தொட்டு,கைகளில் இருக்கும் மருதாணியில் தடவுங்கள். இதுவும் மருதாணி கலர் நன்கு வர உதவும். கவரிங் அல்லது பேன்சி கடைகளில் இருக்கும் வளையல்களை அணிபவராக இருந்தால் அது உங்கள் கைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்று டெஸ்ட் செய்து அணியுங்கள். ஏனென்றால அலர்ஜி ஏற்பட்டு தோல் நிறம் பாதிக்கப்பட்டால் மீண்டும் பழைய நிறம் வருவது கடினம்.
இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்
ஹேண்ட் லோஷன்
ஸ்க்ரப்பர்
சின்ன சைஸ் பேபி பிரஷ்
ஒரு கப்பில் தண்ணீர்
சிறிது லிக்விட் சோப்
முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம். சலோனிலேயே காலுக்கு மட்டும்தான் Corn Blade உபயோகிப்பார்கள். கைகளுக்கு என்றால் உபயோகிக்க மாட்டார்கள். தெரியாமல் உபயோகித்து கையில் வெட்டிக் கொள்ளாதீர்கள்.
Corn Blade என்பது காய்கறி தோல் சீவுவது போல் கால்களில் சேர்ந்திருக்கும் மிக கடினமான தோல்களை நீக்கப் பயன்படுவது. பார்க்கவும் சின்ன சைசில் தோல் சீவி போன்றே இருக்கும். உபயோகிக்க எளிது. முதலில் கால்களுக்கு உபயோகித்துப் பார்த்து பிறகு, கைகளுக்கு ஒரு முறை மட்டும் செய்யலாம். ஏனென்றால் கால்களில் ஷூ, செருப்பு அணிவதாலும், நமது வெயிட்டை தாங்குவதாலும் உள் பாதங்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேவைப்படும் Corn Blade, கைகளுக்கு ஒரு முறை உபயோகித்தாலே போதும். பிறகு நமது ஒழுங்கான கவனிப்பிலேயே கடினமான தோல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இப்போது நெயில் கட்டர் கொண்டு நகங்களை ஷேப் செய்யுங்கள். முனையில் அரைவட்ட வடிவில் இருக்கும் நகங்கள் எப்போதும் உள்ள ட்ரெண்ட் என்றாலும் மிக மாடர்ன் லுக் ட்ரெண்ட் இப்போது நேர்வடிவ முனையுள்ள நகங்கள்தான். இதற்கு சதுர பக்கங்களைப் போன்று மேல்புறம் ஷேப் செய்ய வேண்டும். சைடுகளில் நகத்தை ட்ரிம் செய்தாலும் மேலே குறுகலாக வெட்டிவிடக்கூடாது. நகங்களை இப்படி வெட்டிய பிறகு ஃபைல் கொண்டு ( பொதுவாக நக வெட்டியிலேயே கோடு கோடாக பின் பக்கம் அட்டாச் செய்திருக்கும்) வெட்டிய இடங்களை தேய்த்து விடுங்கள். இதனை குழந்தைகளுக்கு நகம் வெட்டும்போதும் செய்யலாம். அப்போதுதான் கீறாமல் இருக்கும். நமக்கும் நகங்கள் உடையில் மாட்டி இழுபடாது.
மெனிக்யூர் கிட்டில் உள்ள சிறிய கத்திரிக் கோல் அல்லது பேபி நெயில் கட்டர் கொண்டு விரல் முனையில் நகங்களுக்கு பக்கவாட்டில் உள்ள எக்ஸ்ட்ரா கடின தோல்களை வெட்டி நீக்குங்கள். பழக்கம் இருந்தால் நகத்தின் (நகம் ஆரம்பிக்கும் விரல் பகுதியில், வளர்ந்த நகப் பக்கத்தின் அடிப்பகுதி அல்ல) அடிப்பகுதியில் இருக்கும் தோலையும் லேசாக முனைகளை கட் செய்துவிடலாம். இதனை பார்லரைவிட நாமே செய்து கொள்ளும்போது நமக்கு வலிக்காதவாறு செய்து கொள்ளலாம். க்யூட்டிக்கள் புஷ்ஷர் என்று மெனிக்யூர் கிட்டில் இருக்கும். அது இல்லாதவர்கள் ஸ்டெரிலைஸ் செய்த பிளக்கரின் பின்புறம் அல்லது ஸ்பூனை உபயோகித்து நகத்தில் அடிப்பகுதியில் உள்ள சதையை கீழ் நோக்கி தள்ளிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த இடங்களில் இருக்கும் அழுக்கும் நீங்கும். நகமும் நீண்டதாக தோற்றமளிக்கும். பிறகு கையில் லோஷனை தடவி நன்றாக விரல்களை அழுத்தி மசாஜ் செய்யுங்கள். பிறகு கையினை கழுவி துடையுங்கள்.
இப்போது நெயில் பாலீஷ் போடும் முறையினைப் பார்ப்போம். இதில் என்ன பெரிய விஷயம், நெயில் பாலீஷ் இரண்டு கோட்டிங் கொடுத்தால் விஷயம் முடிஞ்சது என்று சொல்லுபவர்கள் இந்த முறையில் ஒரு முறை பாலீஷ் போட்டால் நிச்சயம் வித்தியாசத்தை உணருவார்கள். நெய்ல் பாலீஷ் போடும் முன்பு முதலில் நகத்திற்கு (Base Coat) பேஸ் கோட் அப்ளை செய்ய வேண்டும். இது நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். ஆனால் நிறமற்றதாக இருக்கும். பேஸ் கோட்டிங் போடுவது, நெயில் பாலீஷ் நன்றாக நம் கையில் பிடித்துக் கொள்ளவும், நகத்திற்கு நிறமாற்றம் போன்ற எந்த விதமான கெடுதல்களும் வராமலும் தடுக்கும். பேஸ் கோட்டிங் உலர்ந்ததும் முதலில் ஒரு கோட்டிங் நெயில் பாலீஷ் கொடுத்து, 2 நிமிடம் கழித்து இரண்டாவது கோட்டிங் கொடுக்க வேண்டும். இது உலர ஒரு 2 நிமிடங்கள் கொடுங்கள். பிறகு Front Coating தர வேண்டும். இந்த Front Coating பாலீஷும் நிறமற்றதாக நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். எல்லா பிரபலமான பிராண்டுகளிலும் இவை அனைத்துமே கிடைக்கும். கடைகளில் கிடைக்காமல் போனாலும், சலோனில் நிச்சயம் கிடைக்கும்.
இப்படி அப்ளை செய்வதன் மூலம் நெயில் பாலீஷ் நீண்ட நாட்கள் இருப்பதோடு, அங்கங்கே உரிந்து போகாமல், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சாதாரண நெயில் பாலீஷ் நிறமும் இந்த முறையில் போடும்போது கைக்கு அழகை தரும். அது தவிர நாமே வீட்டிலேயே French manicure செட் போல செய்து கொள்ளலாம். இதற்கு, நிறமற்ற Base Coat ஒரு முறை அடித்து, பிறகு அதன் மேல் Front Coating அடித்து 2 நிமிடம் உலர விடுங்கள். இப்போது நகம் வளர்ந்திருக்கும் நுனிகளில் மட்டும் வெள்ளை நிறத்தை நக வளைவு மாறாமல் அப்ளை செய்யுங்கள். இது மிகவும் ஸ்டைலிஷான லுக் தரும். வெள்ளை நிறத்துக்கு பதிலாக சில்வர், கோல்ட் என்றும் உபயோகிக்கலாம். உங்கள் நகங்கள் இயற்கையாகவே பளபளப்பாக நகம் மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதுபோல் தெரியும். உடையின் நிறத்துக்கேற்றவாறு நகப்பாலீஷை மாற்ற முடியாதவர்கள், வெஸ்டர்ன் உடைகளை அடிக்கடி அணிபவர்களுக்கு, ஆபீஸ் செல்பவர்களுக்கு அனைவருக்குமே பொருத்தமாக இருக்கும். இது தவிர எப்போதும் சில்வர் கலர் பாலீஷ் கொஞ்சம் க்ளிட்டரியாக இருப்பதை வாங்கி வைத்துக் கொண்டால எப்போது நெயில் பாலீஷ் போட்டாலும், அதன் மேல் இரண்டாவது கோட்டிங்காக சில்வர் கலர் உபயோகித்தால் வித்தியாசமான பெப்பி லுக் கிடைக்கும். ஆனால் இதற்கு மிகவும் லைட்டான சில்வர் கலராக பார்த்து வாங்க வேண்டும். அதில் ஸ்டார் க்ளிட்டர், பெரிய க்ளிட்டர் என்று உள்ளதை வாங்கக்கூடாது.










சில வீடியோ கிளிப்புகள் ..சிறப்பான மணிகூர் செய்து கொள்ள உதவி புரியும் 
நன்றி யு டியுப் ..


ads
Share To:

Bloggersstand

Hello everyone

Post A Comment:

0 comments so far,add yours